பெரம்பலூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அங்கு கிறிஸ்தவ குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள் மீது பாலியல் அத்துமீறலை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரினோ பாஸ்டின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளா் ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு குழு உறுப்பினர் முகம்மது இலியாஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் குழு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.