மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரமும், பஞ்சப்படியும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயில்வே கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு திட்டத்தை கைவிட்டு நேரடியாக மனுக்களை பெற்றிடும் முறையை உருவாக்க வேண்டும். ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழங்குவது போல தமிழ்நாட்டிலும் சமூக பாதுகாப்புடன் கூடிய தனி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பரிமளக்கண்ணன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெக வீரபாண்டியன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பண்ணை சொக்கலிங்கம், சங்க மாவட்டச் செயலாளர் மதிவாணன், நுகர் பொருள் வாணிபக்கழக மாநில துணைத்தலைவர் பன்னீர்ச்செல்வம், ராஜ்மோகன், ஆனந்தன், பிரித்திவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்க துணைத் தலைவர் மணிமாறன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். முடிவில் சங்க கவுரவ தலைவர் சம்பத் நன்றி கூறினார்.