சாதிய வன்கொடுமைகளை கண்டித்து வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்
சாதிய வன்கொடுமைகளை கண்டித்து வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் வேங்கை வயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர்கள் வக்கீல் விவேகானந்தன், கிட்டு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும், அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும், தமிழ்நாட்டில் நிலவும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.