கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, சி.பி.எஸ். (புதிய ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சென்னமராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஆசிக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல், பெரியகுளம் சார்நிலை கருவூல அலுவலகம், பெரியகுளம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களிலும் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.