பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காந்தி ஜெயந்தி நாளில் அந்த சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்திற்கு த.மா.கா.வினர் ஏற்பாடு செய்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கையில் வாழை மரக்கன்றுடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாழை மரக்கன்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.