த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு த.மா.கா. நகரத்தலைவர் ராஜகோபால் தலைமையில் கையில் தட்டில் பழம், வெற்றி பாக்கு வைத்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24, கடலையூர் சாலை, வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இலவச பட்டாக்களை...

இதே போலஇலுப்பையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரா.உத்தண்டராமன் தலைமையில் வந்த பெண்கள் அளித்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு அமைச்சர் கீதாஜீவன் கோவில்பட்டியில் சுமார் 725 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

இதில் இந்திரா நினைவு குடியிருப்பு மூலமாக சுமார் 20 பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச வீட்டுமனை பெற்ற 150 பேர் சொந்த செலவில் வீடுகள் கட்டியுள்ளனர். இவர்கள் உரிய சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதிகள் கேட்டு பலமுறை மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்கள் வீடுகளில் குடியேற முடியாமல், வீடுகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் இலவச பட்டா பெற்ற மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்