ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அசோகன், குபேந்திரன், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு கோட்ட பொறுப்பாளர் மணியப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இனியன் கோரிக்கைகயை விளக்கி பேசினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் ஓய்வூதியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளின் மீது தாமதமின்றி விசாரணை செய்து நிர்ணயித்துள்ள கால வரையரைக்குள் முடித்திட வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டத்தினை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி நிலுவை இனங்கள் மீது தீர்வு காணப்பட வேண்டும்.
1-4-2003-க்கு பின்னர் பதவி உயர்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியர்களுக்கு மாவட்ட அளவில் குறைதீர்வு கூட்டம் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட பொருளாளர்கள் கருணாகரன், முரளி, திருவண்ணாமலை கோட்ட பொறுப்பாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.