சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பால் உற்பத்தியாளர்கள்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில துணை தலைவர் பெரியண்ணன் வரவேற்று பேசினார். இதில் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
50 சதவீத மானிய விலையில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பாலின் அளவு, தரத்தின் அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி பாலுக்குரிய பணம் வழங்க வேண்டும்.
பால் வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து வருகிற 26-ந்தேதிக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் காத்திட வருகிற 28-ந்தேதி முதல் தொடர் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.