அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தனிநபர் வருமானத்தை ரூ.10 லட்சமாக உயர்த்திட வேண்டும். தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் போனஸ் வழங்க மாநிலங்களுக்கு உரிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார், சத்துணவு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜெய்கணேஷ், சுந்தரமூர்த்தி, ராஜாமணி, இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.