சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களாகிய அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், கியாஸ் சிலிண்டர் செலவினத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோவில்பிச்சை கோரிக்கை விளக்க உரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராசையா, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார். முன்னதாக பேரணி நடந்தது.