திருவோடு ஏந்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில், கையில் திருவோடு ஏந்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கையில் திருவோடு ஏந்தியும், நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், சீர்காழி ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நீதிசோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயசக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.