கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை மறைமாவட்டம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பணிக்குழு சார்பில் பாளையங்கோட்டையில் நேற்று கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்று தலித் கிறிஸ்தவர்களையும், தலித் இஸ்லாமியர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வு பணிக்குழு செயலாளர் சேவியர் ராஜ், தென்மண்டல தலித் கிறித்தவ விடுதலை இயக்க தலைவர் இலோசியஸ், செயலாளர் சார்லஸ் அம்பேத்கர், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் கோபாலன், பங்குத்தந்தைகள் லாரன்ஸ் பீட்டர், தேவராஜ், சேவியர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.