விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-28 12:26 GMT

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அம்மையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வசந்தாமணி, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய ஊரக வேலைதிட்டத்தின் வேலை நாட்களை 150 ஆக உயர்த்துவதோடு, தினசரி சம்பளத்தை ரூ.381 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். மேலும் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும். அந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும்.

ஊரக வேலை திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, இதர பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும். தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

வேடசந்தூர், வடமதுரை

இதேபோல் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சிக்கணன் தலைமை தாங்கி பேசினார்.

ஒன்றிய செயலாளர் சவடமுத்து, ஒன்றிய பொருளாளர் பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் முனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி நன்றி கூறினார்.

பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அருள்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய தலைவர் பண்டரிநாதன், பொருளாளர் உமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கனகு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்