தஞ்சையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கக் கோரி தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட அவைத் தலைவர்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.பி. பாரதிமோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.
அழுது புலம்பும் செந்தில்பாலாஜி
இதில் முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது எத்தனையோ பொய் வழக்குகள் போடப்பட்டன. ஆனால் அவர் அந்த வழக்குகளை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றார். ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி அழுது புலம்புகிறார். வழக்கை நெஞ்சுறுதியுடன் செந்தில்பாலாஜி சந்திக்க வேண்டாமா?. இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர்வரி, மின்கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கட்டுமான பொருட்களும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடாக உள்ளது. பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், கோவிந்தராசு, ராம.ராமநாதன், ரத்தினசாமி, இளமதிசுப்பிரமணியன், தவமணி, ராமச்சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், மருத்துவர் பிரிவு செயலாளர் டாக்டர் சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கதிரேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பாலைரவி மற்றும் தெற்கு, வடக்கு மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்துப்பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எனவும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது எனவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.