ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நயினார்கோவில், திருவாடானையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-10-09 18:45 GMT

நயினார்கோவில்

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் காதில் பூ சுற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் அருணகிரி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் வேதவல்லி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் என்ஜினீயர் செல்வகுமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக உண்மைக்கு மாறாக முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காதில் பூ சுற்றி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசுந்தரி, விமலா தேவி, செல்வரத்தினம், ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்க செயலாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நயினார்கோவில்

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அலுவலகத்தில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் மாநில மையம் அறிவுறுத்தலின் பேரில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி காதில் பூ வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டைராஜ், திருநாவுக்கரசு தலைமை தாங்கினர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் முன்னிலை வகித்தார். யூனியன் அலுவலர் காசிநாததுரை உள்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்