தமிழகம் முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து இஸ்லாமிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2023-05-05 23:57 GMT

சென்னை,

கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சி அமைப்புகளுடன் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் உருவானது. சமீபத்தில் இந்த படத்தின் 'டீசர்' வெளியானபோது பெரும் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் நேற்று வெளியானது. சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது. இங்கு மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி நேற்று திரைக்கு வந்தது.

இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் நேற்று வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த சூழ்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டை வணிக வளாகத்தில் இயங்கும் தியேட்டர் வெளியே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சென்னை மண்டல தலைவர் முகமது ரசீது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் தியேட்டரை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலைந்து சென்றனர்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்