டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தாண்டவன்குளத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-13 18:45 GMT

கொள்ளிடம்:

தாண்டவன்குளத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினத்தில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தினந்தோறும் அதிக அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன.அங்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் இந்த கடையை அருகில் உள்ள தாண்டவன்குளம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதற்கான பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த பயனுமில்லை என தெரிவிக்கின்றனர்

ஆர்ப்பாட்டம்

இதனை அறிந்த லஞ்சம் கொடாதோர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிதாக டாஸ்மாக் அமைக்கப்பட உள்ள கட்டிடத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மயானத்துக்கு செல்லும் சாலையில் விளைநிலங்களுக்கு இடையே டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும்.

பழைய பாளையத்திலிருந்து இந்த வழியாக புதுப்பட்டினத்திற்கு அத்தியாவசிய பணிகள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறியும், டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்