தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம்
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தகுதியுடைய இடைநிலை ஆசிரியருக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உரிமையினை சட்டபூர்வமாக தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் வகையில் திருந்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீராப்பள்ளியில் உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத்தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மோகன்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சங்கர், மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கதிரேசன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அமைப்பாளர் பாரதி, மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.