அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாநில மகளிர் அணி துணைக்குழு அமைப்பாளர் தேவிசோனா, மாநில பொருளாளர் ஜெயலட்சுமி, மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, மண்டல செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.
இந்த ஊர்வலம் காந்திசிலை அருகே புறப்பட்டு டி.பி., சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நிறைவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள், எம்.டி.எம்., சுகாதார ஆய்வாளர்கள், எம்.எல்.எச்.பி., ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.