தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் அருகே தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தில் குளுக்கோஸ் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் சுமார் 7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மண்வளம், நீர் வளம், காற்று மாசு பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொழிற்சாலை விதிகளை மீறி செயல்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது. தற்போது மீண்டும் தொழிற்சாலை தன்னிச்சையாகவும் அரசு விதிகளை மீறி முறைகேடாக இயங்கி வருவதால் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். இந்தநிலையில் தொழிற்சாலை தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து மங்களபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தொழிற்சாலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க தொழிற்சாலையின் முன்பு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.