ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மல்லிகா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயபிரகாசம் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அதைதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் ஹரிபாபு, சுந்தரம், பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வம்பாள் நன்றி கூறினார்.