விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் சங்ககிரி சாலை ஒட்டமெத்தையில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார துறை தனியார்மயமாவதை கண்டித்தும், தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டம் 2022 மசோதாவை திரும்ப பெற வேண்டும், தேவையான மின்சாரத்தை அரசே உற்பத்தி செய்திட வேண்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்திடவும் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.அசன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி மற்றும் சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நிறைவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பொறியாளர் அதிகாரியை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது.