நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று கட்சியின் மண்டல செயலாளர் பாஸ்கர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.
இதில் காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கான உரிமையை தர மறுப்பதாகவும், ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜ், மாவட்ட தலைவர்கள் ராஜகோபால், கிழக்கு மாவட்ட நிர்வாகி ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.