உக்கடம் பஸ் நிலைய வணிக வளாக கடைகள் இடிப்பு

மேம்பாலத்தின் இறங்குதளம் அமைக்க உக்கடம் பஸ் நிலைய வணிக வளாக கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-01-23 18:45 GMT

உக்கடம்

மேம்பாலத்தின் இறங்குதளம் அமைக்க உக்கடம் பஸ் நிலைய வணிக வளாக கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது.

உக்கடம் மேம்பாலம்

கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் தடுக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உக்கடம் போலீஸ் நிலையம் அருகே இருந்து ஆத்துப்பாலம் வரை 2.3 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலையாக ரூ.475 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக உக்கடம் போலீஸ் நிலையத்தின் எதிர்ப்புறத்தில் மேம்பாலத்தின் இறங்குதளம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

உக்கடம் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது.

ஏறுதளம்

முதற்கட்டமாக தற்போது பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் ஏறுதளம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

அதுபோன்று உக்கடம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போக்குவரத்து பணிமனை வழியாக உக்கடம் மேம்பாலத்துக்கு செல்ல ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகி றது. இந்த மேம்பாலம் பஸ் நிலையத்துக்கு உள்பகுதி வழியாக செல்வதால் பஸ் நிலையம் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

எனவே இந்த பஸ் நிலையத்தில் பாலக்காடு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் இருக்கும் வணிக வளாக கடைகளை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

வணிக வளாக கடைகள் இடிப்பு

இதற்காக ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த கடைகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர். பொக்லைன் எந்திரங்களும் வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து அங்குள்ள கடைகளை இடித்து அகற்றும் பணிகள் தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் பயணிகள் வராமல் இருக்க போலீசார் தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தபடி இருந்தனர். மேலும் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்

இந்த மேம்பாலத்தில் ஏறுவதற்கு வசதியாக வாலாங்குளம் சாலையில் இருந்து உக்கடம் பஸ் நிலையம் வழியாக 7 மீட்டர் அகலம், 230 மீட்டர் நீளத்துக்கு ஏறுதளம் அமைக்கப்படுகிறது.

பஸ் நிலையத்தின் வழியாக மேம்பாலம் செல்வதால் இடையூறு ஏற்படுவதை தடுக்க பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த வணிக வளாக கடைகள் இடிக்கப்படுகிறது.

ஓரிரு நாட்களில் இடிக்கும் பணிகள் முடிவடைந்து விடும்.

மேம்பாலம் அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.475 கோடியில் ரூ.160 கோடி நிலம் கையகப்படுத்த செலவாகி உள்ளது. மேலும் உக்கடம் போலீஸ் நிலையத்தின் எதிர்ப்புறத்தில் இறங்குதளம் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன.

இன்னும் பாலக்காடு, பொள்ளாச்சி சாலையில் மட்டும் பணிகள் முடிக்க வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்