2 பேர் பலியான ஓட்டலை இடிக்கும் பணி தொடங்கியது

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான ஓட்டலை இடிக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-09-27 13:42 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான ஓட்டலை இடிக்கும் பணி தொடங்கியது.

2 பேர் பலி

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டல் சுவரின் பகுதி மழையினால் இடிந்தது. இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை கடந்த 18-ந் தேதி அகற்றும் பணி நடந்தது. அந்த பணியில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமமூர்த்தி (வயது 50), தொரப்பாடியை சேர்ந்த பவானி (60), கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் ராமமூர்த்தி, பவானி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஓட்டலை ஆய்வு செய்து, இடிக்க உத்தரவிட்டார்.

ஓட்டல் இடிக்கும் பணி

இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வபாலாஜி, உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அங்கு வந்தனர். மேலும் கடையின் உரிமையாளரும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையை தாங்களாகவே இடித்துக்கொள்வதாக கூறினர். இதையடுத்து கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுத்து வைக்கப்பட்டு காலிசெய்யப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ''கடையினை உரிமையாளரே இடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன்படி பொருட்களை காலிசெய்தனர். ஏற்கனவே இடிந்த இடத்தில் இருந்து கடையினை இடிக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்