காஞ்சீபுரத்தில் வேகவதி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
காஞ்சீபுரத்தில் வேகவதி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
வீடுகளை காலி செய்ய மறுப்பு
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமித்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ் நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்ய மறுத்து தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.
78 வீடுகள் இடித்து அகற்றம்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையோரம் தாயார் குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.