சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை

விருத்தாசலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

Update: 2023-04-15 18:45 GMT

விருத்தாசலம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த யூ.கே.ஜி. மாணவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அன்பு செல்வி, வட்ட தலைவர் சந்தன மேரி, செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் சுமதி, குழு உறுப்பினர்கள் சத்யா, கவிதா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முறையான சிகிச்சை

பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் லூர்துசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் விருத்தாசலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த காரணத்தை காட்டியும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பள்ளியில் வேலை பார்க்கும் 2 ஆசிரியைகள் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை நடந்த சிறுமிக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் சம்பந்தமான உடல்நிலை குறித்து விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவர் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

அறிக்கை வெளியிட வேண்டும்

சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தவறான சம்பவங்கள் ஏதும் நடக்காத வகையில் முறையான ஆய்வு நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழக அரசு கல்வித்துறை ஆய்வு நடத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்ற மாதர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்