தவுட்டுப்பாளையத்தில் கூலி உயர்வு கோரி, சிறு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
கூலி உயர்வு கோரி தவுட்டுப்பாளையத்தில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்,
கூலி உயர்வு கோரி தவுட்டுப்பாளையத்தில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூலி உயர்வு வழங்கப்படவில்லை
அந்தியூர் தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இந்த சிறு விசைத்தறிகளில் லுங்கி மற்றும் துண்டுகள் உள்ளிட்ட ஜவுளி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஈரோடு, பெருந்துறை, விஜயமங்கலம், சேலம், நங்கவள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரிய விசைத்தறி உரிமையாளர்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் ஜவுளிகளை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. விலைவாசி ஏற்றம், நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவை காரணமாக பெரிய விசைத்தறி உரிமையாளர்கள் 20 சதவீதம் கூடுதலாக கூலி உயர்வு வழங்க வேண்டும் என சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
இந்த நிலையில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறு விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் திடீரென காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தியூர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிகள் இயங்கவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
20 சதவீதம்
இதனிடையே வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், '20 சதவீதம் கூலி உயர்வு பெறும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது,' என முடிவு செய்யப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சிறு விசைத்தறி உாிமையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்தியூர் தாசில்தார் தாமோதரன் மற்றும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.