துறைமுக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க கோரிக்கை
துறைமுக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று எச்.எம்.எஸ். சங்க அகில இந்திய தலைவர் பி.எம்.முகம்மது ஹனீப் கூறினார்.
அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல் கூட தொழிலாளர் சம்மேளனம் (எச்.எம்.எஸ்) சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.எம்.முகம்மது ஹனீப் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் தாமஸ் செபாஸ்டின், தூத்துக்குடி பொதுச்செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துறைமுக தொழிலாளர்களுக்கு 1.1.2022 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பாக, ஊதிய உயர்வு குழு அமைக்கப்பட்டு இதுவரை ஒரே ஒரு கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. எனவே, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக முடித்து, ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். அதுபோல 2021- 2022-ம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும். துறைமுகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகம்மது ஹனீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துறைமுக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்து பேசி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அதபோல 2021-2022-ம் ஆண்டுக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தையையும் விரைவாக தொடங்க வேண்டும். துறைமுகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
அதானி குழுமத்தின் தனியார் துறைமுகங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் துறைமுக துறையில், அதானி குழுமம் ஏகோபத்திய ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அரசு துறைமுகங்கள், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு துறைமுகங்களை ஒழிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், துறைமுகங்களில் உபரியாக உள்ள நிதியை கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த திட்டத்துக்கு என்று பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் துறைமுகங்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மாறாக துறைமுக சொத்துக்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்புகள் தான் இடம் பெற்று உள்ளன.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் முக்கியமான திட்டமான வெளித்துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை உள்ளிட்ட துறைமுக தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.