பழங்குடியினர் மலைக்குறவ மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

பழங்குடியினர் மலைக்குறவ மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-09 19:59 GMT

ஐ.நா.சபை அறிக்கையின்படி உலக பழங்குடியினர் தின விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து மலைக்குறவன் பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு மாலையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜா சிதம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர் விஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் பூராசாமி கலந்து கொண்டு பழங்குடியினர் மலைக்குறவன் இன மக்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவக்குமார், நிர்வாகக்குழு தலைவர் சுப்ரமணி, துணைத்தலைவர் சிவசாமி, தமிழ்நாடு ஆன்றோர் (பழங்குடியினர்) பேரவையின் மாநில அமைப்பாளர் இருளபூ செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பழங்குடியினர் மலைக்குறவன் இன மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் தங்கு தடையின்றி விசாரணை நடத்தி உடனடியாக வழங்கிட வேண்டும். பழங்குடியினர் மலைக்குறவன் இன மக்களுக்கு அரசு வீட்டு மனைபட்டா வழங்கியும், அதில் வீடு அரசே கட்டி கொடுக்க வேண்டும். பழங்குடியினர் மலைக்குறவன் இன மக்கள் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக உலக பழங்குடியினர் தின விழாவையொட்டி பெரம்பலூர் சங்குப்பேட்டையில் மதியம் தொடங்கிய பழங்குடியினர் மலைக்குறவன் மக்களின் விழிப்புணர்வு ஊர்வலம் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்