செந்துறையில் போலீஸ் நிலையம் அமையுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புகார் கொடுக்க 33 கி.மீ. தூரம் பயணிக்கும் பரிதாப நிலை உள்ளதால் செந்துறையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-02-25 20:30 GMT

உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதே போலீஸ் துறையின் தலையாய பணி ஆகும். நாட்டு மக்களின் உயிருக்கும், உடமைக்கும் முழு பாதுகாப்பு அளிக்க போலீசார் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர்.

செந்துறையில் போலீஸ்நிலையம்

காவல் பணியே கடமையாக இருந்தாலும், குற்ற சம்பவங்கள் நடைபெறும் முன்பே தடுப்பது அவசியம். இதற்காக பொதுமக்களுடன், போலீசார் நெருங்கி பழகி தோழனாக மாற வேண்டும். இதற்கு வசதியாக நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.

பொதுவாக குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து போலீஸ் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அதேநேரம் மக்கள் எளிதாக போலீசாரை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக போலீஸ் நிலையம் அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற எதிர்பார்ப்பு இன்னும் பல ஊர்களில் உள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பகுதியும் ஒன்றாகும். மலையும், மலையை சார்ந்த கிராமங்களை தன்னகத்தே கொண்டது செந்துறை.

செந்துறையை தலைமையிடமாக கொண்டு போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படாமல் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

2-வது பெரிய ஊராட்சி

நத்தம் தாலுகாவில் அமைந்துள்ள செந்துறை ஊராட்சி மாவட்டத்தின் 2-வது பெரிய ஊராட்சி ஆகும். செந்துறையை சுற்றிலும் பிள்ளையார் நத்தம், குடகிபட்டி, சிரங்காட்டுப்பட்டி, கோசுகுறிச்சி, சேத்தூர், கோட்டையூர், குட்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் கீழ் 150-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் பிள்ளையார்நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், சார்-பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், அரசு மதுபான கடைகள், சந்தைகள் உள்ளன.

பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால், குற்றங்கள் கணிசமாக நடைபெறும் பகுதியாகவும் செந்துறை திகழ்கிறது. இந்த பகுதிகள், நத்தம் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சாதாரண குற்றங்கள் மட்டுமின்றி கொலை, கொள்ளை உள்ளிட்ட பிற குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் உடனுக்குடன் புகார் செய்ய முடியவில்லை. இதற்கு தொலைதூரம் பயணம் செய்வது தான் முக்கிய காரணமாக உள்ளது.

33 கிலோமீட்டர் பயணம்

செந்துறையில் இருந்து ஒருவர் புகார் கொடுக்க நத்தம் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டுமானால் 21 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். இதன் காரணமாக பொதுமக்கள் புகார் கொடுக்க செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில கிராமங்களில், கட்டப்பஞ்சாயத்து நடந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள், குடும்ப பிரச்சினைகளுக்கு சாணார்பட்டி மகளிர் போலீஸ் நிலையம் செல்ல வேண்டியது உள்ளது. இதற்கு அதிகபட்சம் 33 கி.மீ. தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும் கிராமங்களாக இருப்பதால் போதிய பஸ் வசதியும் இருப்பதில்லை. இதேபோல் புகார் கொடுத்து விசாரணைக்காக போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

புறக்காவல் நிலையம்

இதற்கிடையே செந்துறையை தலைமையிடமாக கொண்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ஒன்றிரண்டு போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் துரித நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

மதுபானம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டு போன்றவற்றின் விற்பனை களை கட்டி வருகிறது. புகையிலை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்கவும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் செந்துறையை தலைமை இடமாக கொண்டு புதிதாக போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய கருத்து விவரம் வருமாறு:-

இளவயது திருமணம்

பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவி தேன்மொழி முருகன்:- திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் பிள்ளையார்நத்தம் புதூர் அமைந்துள்ளது. பஸ் போக்குவரத்து மிகவும் குறைவாக இருப்பதால் மக்களின் வெளிஉலக தொடர்பும் குறைவாகவே இருக்கிறது. இதனால் இளவயது திருமணம் அதிகமாக நடக்கிறது. பள்ளிகளில் படித்து கொண்டிருக்கும் போதே மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பது அவ்வப்போது நடக்கிறது. அதை தடுப்பது மிகவும் அவசியம். அதேபோல் குற்ற சம்பவங்களை விசாரிக்க நீண்ட தூரத்தில் இருக்கும் நத்தத்தில் இருந்து போலீசார் வரவேண்டியது உள்ளது. எனவே செந்துறையில் போலீஸ் நிலையம் அமைந்தால் மக்களின் பாதுகாப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

போதை பொருட்கள்

சிரங்காட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி செல்வி வீரன்:- பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் நடக்கிறது. இதுபற்றி தகவல் அறிந்து நத்தத்தில் இருந்து போலீசார் வருவதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது.

அய்யனார் அருவி

குடகிபட்டி ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி அழகர்சாமி:- எங்கள் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடகிபட்டி ஊராட்சியில் உள்ள அய்யனார் அருவியில் குளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் அருவிக்கு காட்டுப்பாதையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் அருவிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து, குற்ற செயல்களை தடுக்க எங்கள் ஊருக்கு அருகே உள்ள செந்துறையில் போலீஸ் நிலையம் திறக்க வேண்டும்.

குடிமகன்கள் தகராறு

கருத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த பத்திர எழுத்தர் பிரபாகரன்:- பள்ளி வளாகம், மக்கள் அதிகம் நடமாடும் பொதுஇடங்களில் அமர்ந்து மது குடிப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இதுபற்றி கேட்டால் தேவையற்ற தகராறு ஏற்படுகிறது. போதை ஆசாமிகளால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு செந்துறையில் போலீஸ் நிலையம் அமைந்தால் நன்றாக இருக்கும். மேலும் செந்துறையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களை கண்காணித்து தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்