ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை

விருதுநகரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-04-15 00:31 IST


விருதுநகரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படை

விருதுநகர் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் போதிய அளவு இல்லாத நிலையில் குறிப்பிட்ட வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் ஒப்பந்த தூய்மை பணிமேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இப்பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலும் அனைத்து நகராட்சிகளுக்கும் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒரே ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதுவரை விருதுநகரில் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரரின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு மாவட்டம் நிர்வாகம் நிர்ணயத்துள்ள தினசரி ஊதியம் ரூ. 458 வழங்கப்படாமல் தினசரி ஊதியமாக ரூ.385 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

உபகரணங்கள்

மேலும் தூய்மை பணிக்கு தேவையான தள்ளு வண்டிகளை தூய்மை பணியாளர்களே தங்கள் சொந்த செலவில் வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்படும் உபகரணங்களையும் அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர் வற்புறுத்தும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக நகரில் தூய்மை பணியில் குறைபாடு ஏற்படும் நிலை உருவாகும்.

நடவடிக்கை

எனவே நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்கவும், அவர்களுக்கு தேவையான உபகரணங்களை ஒப்பந்ததாரர் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து ஆய்வு செய்து ஒப்பந்த பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்