மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் - எடப்பாடி பழனிசாமி
மேகதாது விவகாரத்தில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
காவிரி விவகாரம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை. காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை.
ஒருவேளை மேகதாதுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக விடும். அரசு அலட்சியமாகச நடந்து கொண்டு இருப்பதனால்தான் இதனை நாங்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.
இன்றைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறையின்றி மெத்தனமாகச் செயல்படுகிறது.
இனிமேலும் அரசு தூங்கிக்கொண்டு இருக்காமல், விவசாயிகள் நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறேன். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். நெருக்கமாக இருக்கிறார்கள். இப்படி நெருக்கமாக இருக்கும் போது மேகதாது விவகாரத்தில் ஏன் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது என்பது தான் சந்தேகத்தை எழுப்புகிறது." இவ்வாறு அவர் கூறினார்.