லாரியில் கொண்டு சென்று பொருட்கள் வினியோகம்

ரேஷன் கடைகளில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தவிர்க்க, லாரியில் கொண்டு சென்று பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த பணியாளருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-01-06 18:45 GMT

வால்பாறை

ரேஷன் கடைகளில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தவிர்க்க, லாரியில் கொண்டு சென்று பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த பணியாளருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ரேஷன் கடைகளில் அட்டகாசம்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 48 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 45 ரேஷன் கடைகள், எஸ்டேட் பகுதியில் செயல்படுகின்றன. வனப்பகுதியையொட்டி உள்ள அந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இவை ரேஷன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை தின்பதோடு சிதறடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகிவிட்டது.

இதன் காரணமாக ரேஷன் கடை பணியாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மனித-காட்டுயானை மோதலும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வால்பாறை பகுதியில் நடமாடும் ரேஷன் கடைகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

லாரியில் கொண்டு சென்று...

இந்த நிலையில் வால்பாறை அருகே கவர்க்கல், சக்தி, தலநார் போன்ற எஸ்டேட் பகுதியில் லாரியில் கொண்டு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தனது சொந்த முயற்சியில் ரேஷன் கடை பணியாளர் நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் ரேஷன் பொருட்கள் உரிய நேரத்துக்கு கிடைப்பதாகவும், கடைகளில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்வது தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் ரேஷன் கடை பணியாளரை பாராட்டினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இதுபோன்று அரசு சார்பில் நடவடிக்கை எடுத்து லாரியில் கொண்டு சென்று ரேஷன் பொருட்களை அனைத்து எஸ்டேட் பகுதியிலும் வினியோகித்து வந்தால், கடைகளை காட்டுயானைகள் உடைக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்