ரூ.6¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான டெல்லி வாலிபர் சிறையில் அடைப்பு

கார் பரிசாக விழுந்திருப்பதாக வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-03-29 18:37 GMT

கார் பரிசு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்த ராஜாவின் மகன் அனந்தகுமார்(வயது 20). இவருக்கு கடந்த 15.7.2021 அன்று செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் ஆன்லைன் தளம் மூலம் 6.8.2020 அன்று வாங்கிய ஸ்மார்ட் வாட்சுக்கு கார் பரிசு விழுந்துள்ளது. அந்த காரை பெற்றுக்கொள்ள வரி தொகையாக ரூ.6 லட்சத்து 34 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என கூறி 8 வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளனர்.

அந்த வங்கி கணக்குகளுக்கு அனந்தகுமார் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் பரிசு விழுந்ததாக கூறப்பட்ட கார் அனந்தகுமாருக்கு வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனந்தகுமார் இதுகுறித்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

தனிப்படை அமைப்பு

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் தனிப்படை போலீசார் டெல்லியில் உள்ள ரோகினி என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டம், பிம் நகர் பகுதியை சேர்ந்த கிஷான்(32), காசியாபாத், விஜய நகரை சேர்ந்த ரோஹித் பால்(29), அரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், ஆர்யா நகரை சேர்ந்த அங்கித் பன்சால்(30) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த டெல்லி மாநிலம், நாகர்பூரை சேர்ந்த மோகன் திவாரியின் மகன் பாதல் என்கிற சுஜித்குமார் திவாரியை (28) பிடிக்க பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீசார் சதீஷ்குமார், திலீப்குமார், முத்துசாமி ஆகியோர் கொண்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கடந்த 21-ந் தேதி டெல்லி புறப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

டெல்லி ரோகினி என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த சுஜித்குமார் திவாரியை கடந்த 26-ந்தேதி சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் சுஜித்குமார் திவாரியை போலீசார் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார். மேலும் அவர் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும், என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்