நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதமவதாக நலச்சங்க கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் புகார் கூறினர்.;

Update: 2022-10-08 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதமவதாக நலச்சங்க கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் புகார் கூறினர்.

ஊழியர்கள் பற்றாக்குறை

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். தலைமை டாக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவணபிரகாஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், ரத்தவங்கி பிரிவு டாக்டர் மாரிமுத்து மற்றும் டாக்டர்கள், சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ்:- பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உள்பட அனைத்து ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் 75 டாக்டர்களுக்கு 35 பேரும், 140 செவிலியர்களுக்கு 70 பேரும், ஆய்வக நிபுணர் 12 பேருக்கு 3 பேரும், மருந்தாளுனர் 12 பேருக்கு 3 பேரும் உள்ளனர். இதனால் விபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு வரும் நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து விட்டு கோவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையில் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஆவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும், ஆட்கள் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. ரத்த வங்கிக்கு ஆம்புலன்சும், பிரசவத்திற்கு பிறகு பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்ல கூடுதலாக ஒரு வாகனமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம்

சங்க உறுப்பினர் முருகானந்தம்:-

பழைய கட்டிடத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்களுக்கு ஆஸ்பத்திரியில் தனி அறை வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். பெரும்பாலான டாக்டர்கள், செவிலியர்கள் உள்நோயாளிகளின் படுக்கைக்கு சென்று பார்ப்பதில்லை என்று புகார் வருகிறது. மேலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஊசி போடாமல் செவிலியர்கள் இருக்கும் இடத்திற்கு வர வைக்கின்றனர். இதனால் வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சங்க உறுப்பினர் கணபதி:-

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் ஆஸ்பத்திரியில் போதுமான வசதிகள் இல்லை. மேலும் அரசு மருத்துவ கல்லூரியாக மாற்ற வேண்டும்.

சங்க உறுப்பினர் வேல்முருகன்:-

அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் ஒப்பந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்து உள்ளதாக புகார் வருகிறது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய மாதசம்பளம் ரூ.14,250-க்கு பதிலாக ரூ.6000 தான் கொடுக்கின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்