ஊதிய உயர்வு கோரிய டிரைவரின் மனுவுக்கு பதில் அளிக்க தாமதம்: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஊதிய உயர்வு கோரிய டிரைவரின் மனுவுக்கு பதில் அளிக்க தாமதத்தால் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2022-12-27 20:21 GMT


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் மோரிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் டிரைவராக சேர்ந்தேன். ஓராண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 6 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால் எனக்கு அதன்படி ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதுகுறித்து 2019-ம் ஆண்டில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்பின் 3-வது ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. 4-வது ஊதிய உயர்வு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே எனக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது போக்குவரத்துக்கழக வக்கீல் ஆஜராகி, "போக்குவரத்து கழகத்தில் டிரைவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது. மனுதாரருக்கு ஊதிய உயர்வு நிறுத்தி தண்டனை விதிக்கப்பட்டதால் 3-வது ஊதிய உயர்வு 2015-ம் ஆண்டில்தான் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டில்தான் வழங்கப்பட வேண்டும். அதற்குள் அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் 4-வது ஊதிய உயர்வை அவர் பெற தகுதியற்றவர் ஆகிறார்" என தெரிவித்தார்.

விசாரணை முடிவில், "மனுதாரர் ஊதிய உயர்வு கோரி பலமுறை அளித்த மனுவை உயர் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. மனுதாரர் 28 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். விதிமுறைகளின்படி அவர் 4-வது ஊதிய உயர்வு பெற தகுதியானவர் என கோருகிறார். தண்டனையை காரணம் காட்டி அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் அவரது மனுவை உரிய நேரத்தில் பரிசீலித்து இருந்திருந்தால் இந்த வழக்கை தொடர்ந்திருக்கமாட்டார். மேலும் அவரது கோரிக்கையை நிராகரித்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ரூ.5 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்