நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்குவதில் தாமதம்

மேற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2022-09-15 18:45 GMT

பொள்ளாச்சி

மேற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சாலை பணிகள் நிறுத்தம்

பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.

இந்த சாலை கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்திமில் அருகில் தொடங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரை 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைய உள்ளது.

இதற்காக ரூ.50 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது 3 மீட்டர் நீளமுள்ள சாலை 10 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. மேலும் சிறு பாலங்களும் கட்டப்படுகின்றன. இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யாததால், பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இதனால் நல்லூரில் இருந்து ஆர்.பொன்னாபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இழப்பீட்டு தொகை

மேற்கு புறவழிச்சாலை பணிக்கு ஜமீன்முத்தூர், சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம் ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டது.

மேலும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, பத்திரபதிவு செய்யப்பட்டு உள்ளது. தாளக்கரை கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

அந்த கிராமத்தில் நில அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் இழப்பீடு தொகை கொடுக்கப்படும்.

ஜமீன்ஊத்துக்குளியில் இழப்பீட்டு தொகையின் உச்ச வரம்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிதி வரவில்லை

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாளக்கரை கிராமத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆர்.பொன்னாபுரம், சங்கம்பாளையம், ஜமீன்முத்தூர் கிராமங்களில் இழப்பீடு வழங்க வருவாய் துறைக்கு மொத்தம் ரூ.5 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள், நிதி வராததால் தாமதமாகி வருகிறது. நிதி ஒதுக்கீடு செய்ததும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்