12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ மற்றும் எச்.சி.எல்.நிறுவனம் இணைந்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது. அதன்படி கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பினை தாட்கோ மூலம் எச்.சி.எல்.நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
மேற்காணும் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். இதில் தாட்கோவின் பங்களிப்பாக எச்.சி.எல் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளுமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.