அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்பிவிஎஸ் மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை,
ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை போலீசர் கைதுசெய்தனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவர் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆர்பிவிஎஸ் மணியன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆர்பிவிஎஸ் மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளது.