அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு: பா.ஜனதா நிர்வாகி கைது
அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 42). இவர் பா.ஜனதா கட்சியில் மாநில தொழில்துறை பிரிவு துணை தலைவராக உள்ளார். செல்வக்குமார், சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கோவை கணபதிபுதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் நேற்று காலை அவரை கைது செய்தனர்.
சட்ட ஒழுங்கு பிரச்சினை
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 2022-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாக செல்வக்குமார் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் இரு பிரிவுகள் இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர் மீது கரூரில் மோசடி வழக்கு ஒன்றும் உள்ளதாக தெரிகிறது. அது குறித்தும் விசாரணை நடக்கிறது, என்றார்.