விருத்தாசலம் அருகே மான் வேட்டையாடியவர் கைது

விருத்தாசலம் அருகே மான் வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-27 18:45 GMT

விருத்தாசலம், 

ரோந்துப்பணி

விருத்தாசலம் அடுத்த அடரி வனப்பகுதியில் சுற்றித்திரியும் புள்ளி மான்களை மர்மநபர்கள் சிலர் வேட்டையாடி கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாக விருத்தாசலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் விழுப்புரம் வன பாதுகாப்பு படை வனவர் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனவர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரிய நெசலூர் அருகே விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மானை வேட்டையாடி...

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், வனத்துறையினரை பார்த்ததும், சற்று முன்னதாகவே திரும்பிச் செல்ல முயன்றனர். இதைபார்த்து சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்களை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றனர். அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் மட்டும் பிடிபட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெண்ணாடம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த கஸ்தூரி மகன் ரஜினி(வயது 39) என்பதும், தப்பியோடியவர் அதேபகுதியை சேர்ந்த மாதவன்(30) என்பதும், இருவரும் சேர்ந்து அடரி ஏரி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 வயதான 20 கிலோ எடை கொண்ட ஆண் மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி விற்பனைக்காக கடத்தி வந்தபோது வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

கைது-துப்பாக்கி பறிமுதல்

இதையடுத்து மானை வேட்டையாடிய ரஜினியை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வேட்டையாடப்பட்ட புள்ளி மான் மற்றும் அதனை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, மானை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே தப்பியோடிய மாதவனையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். மானை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்