பட்டாசு வெடித்தபோது குடிசை தீப்பிடித்தது- 10 சேவல்கள் கருகின
ஈரோட்டில் பட்டாசு வெடித்தபோது குடிசை வீட்டில் தீப்பற்றியது. இதில் 10 சேவல்கள் கருகின.;
ஈரோட்டில் பட்டாசு வெடித்தபோது குடிசை வீட்டில் தீப்பற்றியது. இதில் 10 சேவல்கள் கருகின.
குடிசை வீடு
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். மெக்கானிக். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக திருப்பூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் ஈரோட்டில் உள்ள சிவக்குமாரின் வீட்டின் மாடியில் போடப்பட்டு இருந்த குடிசையில் தீடீரென தீப்பற்றியது.
இதில் குடிசை வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும், அங்கிருந்த 10 சேவல்களும் கருகி உயிரிழந்தன. பட்டாசு தீப்பொறி விழுந்ததன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடோன்
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான குடோன் இந்திராநகரில் உள்ளது. கடந்த 23-ந் தேதி இரவில் குடோனை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவில் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
இந்த தீ விபத்தில் கடையில் உள்ள பழைய பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தபோது தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதேபோல் ஈரோடு வைராபாளையம் பகுதியில் உள்ள குப்பையில் பற்றி எரிந்த தீயை ஈரோடு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அணைத்தனர். ஈரோடு திண்டல் புதுக்காலனியில் உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதையும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தார்கள்.