இன்டர்நெட் கிடைக்காததால் பத்திரப்பதிவு 2 மணி நேரம் பாதிப்பு

இன்டர்நெட் இணைப்பு கிடைக்காததால் ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு 2 மணி நேரம் தாமதமானது.;

Update:2023-06-28 18:41 IST

ஆரணி

பத்திரப்பதிவு அலுவலகம்

ஆரணி கோட்டை மைதானம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. ஆரணி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம பகுதி பொதுமக்கள், வீட்டுமனை பத்திர பதிவு, வீடு மற்றும் கடைகள் பத்திர பதிவு, திருமண பதிவு செய்வதற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

பத்திரப்பதிவு, கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆரணி நகரில் கடந்த சில தினங்களாகவே இன்டர்நெட் இணைப்பு அவ்வப்போது கிடைக்காததால் சர்வர் இயங்காமல் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 2,3 நாட்களாகவே பத்திரப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முகூர்த்த தினம் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று விடுமுறை என்பதாலும் அதிக அளவில் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

இண்டர்நெட் இணைப்பு

ஆனால் இன்டர்நெட் இணைப்பு கிடைக்காததால் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டது.

பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து சார் பதிவாளர் (பொறுப்பு) தெய்வசிகாமணி கூறுகையில், ''நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். ஏனெனில் பத்திரப்பதிவு ஆணையத்தின் உத்தரவின்படி நாங்கள் தயாராக இருந்தாலும் இன்டர்நெட் சரிவர இயங்காததால் பத்திரப்பதிவு செய்வதில் மந்தம் ஏற்படுகிறது. இண்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன் எவ்வளவு பத்திரப்பதிவு செய்ய முடியுமோ விரைவாக செய்ய தயாராக இருக்கிறோம்'' என்றார். பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் கூறுகையில், ''அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே இண்டர்நெட் இணைப்பு தடைபடாமல் கிடைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்