குறைந்து வரும் நீர்மட்டம்: கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா..?

ஏரிகளில் தண்ணீர் வற்றினாலும், கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்பதற்கு அதிகாரி பதில் அளித்துள்ளார்.;

Update: 2024-04-25 22:05 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட கொஞ்சம் கூடுதலாகவே நீர் இருப்பு உள்ளது.

3.65 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.44 டி.எம்.சி ஆக இருந்த நீர் இருப்பு தற்போது 2.45 டி.எம்.சி. ஆக உள்ளது. 1.08 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 790 மில்லியன் கனஅடி ஆக உள்ளது. 3.300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.420 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில் 480 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. கடந்த ஆண்டு 390 மில்லியன் கனஅடி ஆக இருந்தது.

1.460 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி வறண்டு போகும் நிலையில் உள்ளது. அங்கு வெறும் 60 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஏரிகளின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனினும் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வீராணம் ஏரியிலிருந்து நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டுவரப்படும். ஆனால் வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால் அது தற்போது சாத்தியமில்லை. ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படும் கிருஷ்ணா நதிநீர் வருவதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரவேண்டும். ஆனால் அது கிடைப்பதில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த ஆண்டைவிட தற்போது தண்ணீர் அதிகமாகத்தான் உள்ளது.

தற்போது 8.400 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது போதுமானதாக இருக்காது என்ற போதிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இந்த ஆண்டு கை கொடுக்கும்.

சென்னையில் உள்ள கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலைகள் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு உதவும். அந்த ஆலைகளில் இருந்து தினமும் 350 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும். ஜூன் மாதத்துக்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட தேவையில்லை" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்