பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுக்க ஒரு லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்க முடிவு

கோவை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுக்க ஒரு லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்க முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-04-12 18:45 GMT

கோவை

கோவை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுக்க ஒரு லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்க முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் பைகள்

கோவை மாநகர பகுதியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

இந்த பையை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவதால், அவை மக்குவது இல்லை. இதனால் மழை பெய்யும்போது நிலத்தடி நீர்பூமிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது.

எனவே ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. அவற்றை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மஞ்சப்பை

இந்த நிலையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதற்கு வசதியாக மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மஞ்சப்பையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த ஆண்டுக்குள் மாநகர பகுதியை சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

ஒரு லட்சம் பேருக்கு வழங்க முடிவு

மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் இதுவரை ரூ.9 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும். இதற்காக பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மாநகர பகுதியில் ஒரு லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்