சென்னை புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி இணைக்க முடிவு
சென்னையில் குளிர்சாதன பெட்டி மின்சார ரெயில்களை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.
சென்னை,
புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதலாக வசதிகளை மேம்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி மும்பையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து சென்னையிலும் குளிர்சாதன பெட்டி மின்சார ரெயில்களை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.
முதல் கட்டமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிர்சாதன வசதி மின்சார ரெயில் பெட்டிகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி. பெட்டிகள் அறிமுகம் செய்யும் போது அதற்கான சில வழிகள் பின்பற்றப்பட வேண்டும். மெட்ரோ ரெயிலில் இருப்பது போல பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டிக்குள் சென்றவுடன் கதவு தானாக மூடிக் கொள்வதை போல மின்சார ரெயில் பெட்டியிலும் மாற்றப்பட வேண்டும்.
ரெயில் நிலையங்களில் பல்வேறு வழியாக உள்ளே வருவதை தடுப்பது, ஒரே வழியில் வருவதும் மற்றொரு பாதையில் வெளியேறுவதும் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகள் ஏறவும், இறங்கவும் நேரம் ஒதுக்குவது போன்ற பல்வேறு அம்சங்கள் ஆராயப்படுகின்றன. கள ஆய்வு நடத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள நிலையங்கள், அதில் உள்ள வசதிகள், பிளாட்பாரம் போன்றவை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் குளிர்சாதன ரெயில் பெட்டிகள் தற்போது தயாரிக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
சென்னையில் 2023 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முதலாவது குளிர் சாதன மின்சார ரெயில் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.