டிசம்பர் 5-ந்தேதி 7-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்

ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

Update: 2023-11-28 00:15 GMT

சென்னை,

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்து பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு தொண்டரின் இன்றியமையாத கடமையாகும்.

ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

தொடர்ந்து, தலைமைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனையடுத்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதா உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்