தேய்ந்து வரும் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழில்

தேய்ந்து வரும் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனையின் பிடியில் உள்ளனர்.

Update: 2022-12-10 19:38 GMT

தேய்ந்து வரும் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனையின் பிடியில் உள்ளனர்.

நாகரீக வளர்ச்சியில் எந்திரங்களின் பங்கு உடலுழைப்பை குறைத்துவிட்டது. எல்லாவற்றுக்கும் மின்சார எந்திரங்கள் வந்து விட்டது. ஆனால் அந்த காலத்தில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டே வீட்டு வேலைகளை செய்து வந்தனர்.

அப்படி ஒரு பொருள் தான் அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும், உரலும். இவைகள் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமையல் அறையின் ராஜாக்கள் என்று கூறுவார்கள். அதன் மீது கால் வைக்கவோ அல்லது உட்காரவோ கூட அப்போதெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இதை புனிதமாகப் கருதினர்.

ஆனால் மின்சார எந்திரங்களான மிக்சி, கிரைண்டர் ஆகியவை வருகைக்கு பிறகு, கல்லால் வடிவமைக்கப்பட்ட அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது.

எனினும் சிலர் அவற்றை பாரம்பரியமாக நினைத்து பாதுகாத்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அதை சரியாக பாதுகாக்காமல் பயன்பாடின்றி ஒதுக்கி விட்டனர்.

அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள்

எனினும் இன்றளவும் அம்மிக்கல், ஆட்டுக்கல்லை கைகளால் உளியை கொண்டு செதுக்கி விற்பனை செய்து சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருவதையும் காண முடிகிறது.

வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் சில குடும்பத்தினர் கைகளால் அம்மிக்கல் உள்ளிட்டவற்றை ெசதுக்கி தயாரித்து வருகின்றனர். இது தான் இவர்களது தொழில். ஆட்டு கொட்டகை போன்ற குடிசைகள் தான் அவர்கள் வசிக்கும் வீடுகள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு தங்கி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த தொழில் நலிவடைந்து வருவதால் அவர்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் துறையூர் ஆகும். நாடோடியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இன்று வேலூர் மாவட்டத்தில் நிலையாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மின்வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.

அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்க மலைக்கு சென்று அங்குள்ள கற்களை தூக்கிக்கொண்டு வருவார்கள். அந்த கற்களில் சிறிய வகையான குழவி (அம்மிக்கல் மேல் பொருள் வைத்து அரைக்க பயன்படுத்தப்படும் உருளை வடிவிலான கல்), பாக்கு இடிக்கும் சிறிய உரல் போன்றவற்றை பெண்களும், அம்மி போன்ற பெரிய வகையான பொருட்களை ஆண்களும் கை உளியால் செதுக்கி தயாரிக்கின்றனர். இவற்றை தயாரிக்க குறைந்தது 2 நாள் முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்கிறார்கள்.

அவ்வாறு கைகள், உளிகள் தேய தயாரிக்கப்பட்ட அம்மிக்கல் ரூ.600 முதல் ரூ.800 வரையும், பாக்கு இடிக்கும் சிறிய உரல் ரூ.150 முதல் ரூ.200 வரையும், பெரிய வகையான உரல் ரூ.1,800 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனை செய்கின்றனர்.

இந்த பொருட்களை மக்கள் தேடி வந்து வாங்குவது அரிதாக உள்ளது. எனவே அவர்கள் வேறு தொழிலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கூட ஒரு தொகையை உளி, சுத்தியல் உள்ளிட்ட உபகரணங்களை வாங்குவதற்கு அவர்கள் செலவிடுகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மின்வசதி இல்லாததால் செடி, கொடிகள் சூழ்ந்த குடிசையில் விஷ ஜந்துகளுக்கு அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கி வாழும் நிலை உள்ளது. அரசு இடம் வழங்கி வீடு கட்டி வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நலிவடைந்து வரும் தொழிலை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்கின்றனர்.

இது குறித்து உரல் தயாரிக்கும் குடும்பத்தினரிடம் கேட்டபோது கூறியதாவது:-

குடும்ப தலைவி வெள்ளி:-இன்றைய சூழலில் நாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பதே எங்களுக்கு கடினமாகிறது. எந்திரங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளி சந்தையில் விற்கப்படுவதாலும் அந்த பொருட்களை எளிதாக இயக்கி சமைத்து விடலாம் என்பதாலும் கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் முன்வருவதில்லை. எனவே நாங்களும் கடுமையாக உடல் உழைப்பை பயன்படுத்தி இவற்றை தயாரித்தாலும் மிகக்குறைந்த விலைக்கு பொருட்களை விற்க வேண்டிய நிலை தான் உள்ளது.

வாழ்க்கை நடத்துவது என்பது போராட்டமாகவே உள்ளது. எனவே எங்களது தொழில் மேம்பட வழிவகை செய்ய வேண்டும். மேலும் எங்களின் ஏழ்மை நிலையை கருதி அரசு வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

மூதாட்டி ரத்தினம்:- நான் பல ஆண்டுகளாக அம்மிக்கல் உள்ளிட்டவற்றை கைகளால் தயார் செய்கிறேன். நாங்கள் இங்கு வாழ்கிறோம் என்பதற்கான அரசு சார்ந்த எந்த ஆவணங்களும் இல்லை. ஆதார் மட்டுமே உள்ளது. ரேஷன்கார்டு கூட எங்களுக்கு கிடையாது. கொசுக்கடியில் வாழும் நிலை உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாத எங்களுக்கு இரவில் நிலவொளி தான் வெளிச்சத்தை தருகிறது. எங்களது தொழில் நலிவடைந்துள்ளதால் ஆண்கள் வேறு வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர். எனவே எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

திருப்பத்தூர் ஐ.டி.ஐ. அருகில் அம்மிக்கல் தயாரிக்கும் ஜெயவேலு:- நாங்கள் தலைமுறை, தலைமுறையாக இத்தொழிலை செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. போச்சம்பள்ளி பகுதியில் கல் வாங்கி வந்து அம்மிக்கல், உரல், சின்னஉரல் போன்றவற்றை செய்து வருகிறோம். ஒரு அம்மிக்கல் தயாரிக்க 2 நாள் ஆகிறது. ஆனால் அதனை விற்க 2 வாரம் முதல் 2 மாதம் ஆகிறது. ஒரு மாதத்திற்கு சுமார் 5 அம்மிக்கல்தான் விற்பனை செய்ய முடிகிறது. உரல் விற்பனை எப்போதாவதுதான் நடக்கும். நவீன காலத்தில் உரல், அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை மக்கள் வாங்க மறந்து விட்டனர். அனைத்தும் நவீன மயத்தில் வந்துவிட்டது. இதனால் எங்கள் தொழில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

ஒரு காலத்தில் ஊருக்கு 2 முதல் 4 பேர் வரை இத்தொழில் செய்து வந்தோம். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமே 4 பேர் இத்தொழில் செய்து வருகிறோம். அம்மிக்கல், உரல், சின்ன உரல் ஆகியவை விற்பனையானால் மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கும். இதனை வைத்து நாங்கள் வீட்டு வாடகை கொடுப்பதா? மளிகை பொருட்கள் வாங்குவதா? குழந்தைகளை படிக்க வைப்பதா? என்று தெரியாமல் நாள்தோறும் தவித்து வருகிறோம். எனவே எங்கள் தொழிலை காக்கவும், எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த கரும்புச்சாறு விற்பனை செய்யும் அக்பர் கூறுகையில், நான் ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பவர்கள் வசிக்கும் பகுதியில் தான் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறேன். அவர்களை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அடிப்படை வசதியின்றி அல்லல்படுகின்றனர். ஆதார் மட்டுமே அவர்கள் இங்கு வாழ்வதற்கான அடையாளமாக உள்ளது. வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் அவர்களுக்கு உணவு, உடை என அவர்களால் முடிந்த உதவியை செய்கின்றனர். விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் பொருட்கள் விற்பனையாகாமல் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு மனவேதனையில் எடுத்து வருவார்கள். அரசு இவர்களுக்கு இலவச வீடு ஒதுக்கி தர வேண்டும் என்பது எங்களை போன்றவர்களின் கோரிக்கையாகும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்