மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம்-மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

தா.பழூரில் தினசரி மார்க்கெட் ஏலம் எடுப்பது ெதாடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-06-29 18:02 GMT

மார்க்கெட் ஏலம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தினசரி மார்க்கெட் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ஊராட்சி பகுதிக்குள் தரைக்கடை, தள்ளுவண்டி கடை, தலைச்சுமை வியாபாரிகள் உள்ளிட்ட வியாபாரிகளிடம் மகிமை தொகை வசூல் செய்வது வழக்கம்.

நடப்பு நிதியாண்டிற்கான தினசரி மார்க்கெட் ஏலம் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் 3 முறை தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஏலம் விடப்பட்ட போது தனிநபர் ஒருவர் தினசரி மார்க்கெட் ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.

ஏலம் ரத்து

இந்தநிலையில் முன்னறிவிப்பு இன்றி ஏலம் நடைபெற்றதாகவும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த புகார் மனுவை விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்கனவே விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்து மறுஏலம் விட உத்தரவு பிறப்பித்தார்.

வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் தா.பழூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தில் மறு ஏலம் நடைபெற இருப்பதாக ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஏலம் எடுப்பதற்காக பொதுமக்களில் சிலர் அங்கு சென்றிருந்தனர். அப்போது ஏற்கனவே ஏலம் எடுத்த தா.பழூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் மற்றும் அவருடன் சிலரும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வந்து ஏற்கனவே தனக்கு ஏலம் விடப்பட்டு உள்ளதாகவும் அதை ரத்து செய்து இதுவரை தனக்கு எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அப்படி இருக்க மீண்டும் ஏலம் விடுவது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனால் புதிதாக ஏலம் எடுக்க வந்த நபர்கள் ஏற்கனவே ஏலம் எடுத்த பரமசிவம் தான் எடுத்த ஏலத்தை வேறு நபருக்கு அதிக தொகைக்கு உள் ஏலம் வழங்கியுள்ளதாகவும், உள் ஏலம் எடுத்த நபர் வசூல் செய்த மகிமை கட்டணத்திற்கு ஊராட்சி மன்றத்தின் முத்திரையை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒத்திவைப்பு

ஏலம் நடத்துவதற்கு ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் யாரும் வராத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஏலத்தை ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்